மிகினும் குறையினும்- எது?
நம் உடலில் மூன்று விதமான கண்ணுக்கு புலப்படாத, நுண்நோக்கியால் பார்க்க முடியாத (Microscope), ஆய்வகங்களில் (Laboratory) அளவிட முடியாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைதான் வளியை அதாவது வாதத்தை முதலாவதாகக் கொண்ட வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படுபவை. இந்த மூன்றையும் பற்றி பல தொகுதிகளில் புத்தகங்கள் எழுதலாம். அவ்வளவு நுணுக்கமானவை இவை. அவ்வளவு நுணுக்கமாக தெரிந்துகொள்ளாவிட்டாலும், கண்டிப்பாக இவை பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் அவசியம்.
இவை எவ்வளவு நுணுக்கமான விடயங்கள் என்பது கண்டிப்பாக திருவள்ளுவருக்கு தெரிந்திருக்க வேண்டும். எதை வைத்து இவ்வளவு நிச்சயமாக திருவள்ளுவருக்கு இவை பற்றி விளக்கமாக தெரிந்திருக்கும் என கூறுகிறீர்கள்?” என நீங்கள் கேட்கலாம்.
பதில் இதுதான் “இந்த மூன்றும் சாதாரணமான விடயம் இல்லை என்பதை தெரிந்ததால்தான். இதனை தான் கூறுவதாகக் கூறாமல், “நூலோர்” இப்படி கூறுகின்றனர் என மேற்கோள் காட்டி கூறியிருக்கிறார். இதிலிருந்து இன்னொரு விடயமும் தெரியவந்தது, அவர் காலத்தில் மற்றும் அவர் காலத்திற்கு முன்பு சித்த மருத்துவ நூல்கள் இருந்திருக்கின்றன, அவற்றை எழுதிய மருத்துவ அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் “யூகி” என்ற சித்த மருத்துவ அறிஞரின் கருத்தைப் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
“அன்றான சாத்திரங்க ளறிய வேண்டும்
அன்பான நாடிதனைப் பிடிக்க வேண்டும்
குன்றான மலைப்போன்ற நாடி யெல்லாம்
குறிப்புடன் அசாத்தியமுந் சாத்தியமுங் கண்டு
தன்றான அட்டவிதப் பரீட்சை கண்டு
தக்கான குணங் குறிகள்யாவுந் தேர்ந்து
வன்றான வாகடத்தின் நுணுக்கம் பார்த்து
வளமாகப் பிணியதனைத் தீர்ப்போம் தாமே”
சரி மீண்டும் “வளி முதலா எண்ணிய மூன்றிற்கு” வருவோம். எல்லோருடைய உடலிலும் இருந்த மூன்று இயக்கங்களும் (Humour) இயங்கிக் கொண்டிருந்தாலும், இதில் எந்த இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அதனை அடிப்படையாகக் கொண்டு அவர் உடல் நிலை இருக்கும். அதாவது அடிப்படையாக வாத உடல் உடையவர், பித்த உடல் உடையவர், கப உடல் உடையவர் என மூன்று விதமான உடல் இயங்கியல் உள்ள மனிதர்கள் இருப்பர். இவை மட்டுமல்லாது கலப்பு உடல் உடையவர்களும் உண்டு.
இதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை விதி. இந்த வாத, பித்த, கபம் உடலில் எவ்வாறு இயங்குகிறது, இவை உடலில் எந்த அளவில் உள்ளது என கண்டுபிடிப்பதற்கான ஒரு பரிசோதனை முறைதான் “நாடி பார்த்தல்”.
மேலே குறிப்பிட்ட “யூகி” யின் பாடலில் உள்ளது போல
நாடிதனை பிடிக்க வேண்டும்.
குன்றான, மலைபோன்ற நாதமெல்லாம்
குறிப்புடன் பார்க்க வேண்டும்
நோயின் தீவிர நிலை தெரிய வேண்டும்
இது எப்படி சாத்தியமாகிறது?
உதாரணத்திற்கு B.S.M.S படிக்கும் ஒரு சித்த மருத்துவக் கல்லூரி மாணவரை எடுத்துக்கொள்வோம். மூன்றாம் ஆண்டிலிருந்து நோயாளிகளை பரிசோதிக்க ஆரம்பித்து விடுகிறோம். மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு பயிற்சி, மருத்துக் காலம் ஓர் ஆண்டு (CRRI- Compulsory rotatory residential Internship ) ஆக நான்கு ஆண்டுகள் தினமும் நோயாளிகளை சந்திக்கிறோம். ஒரு நாளைக்கு குறைந்தது வெளிநோயாளிகள் 50 பேர், உள் நோயாளிகள் 50 பேர் என 100 பேருக்கு நாடி பிடித்து பார்க்கிறோம். ஆக B.S.M.S படித்து முடிப்பதற்குள் 365X100X4=1,46,000 ஒரு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் பேரின் நாடி பரிசோதனையை பார்த்திருக்கிறோம். M.D மூன்று ஆண்டுகள் என எடுத்துக்கொண்டால் 365X100X3= 1,09,500 ஒரு இலட்சத்திற்கும் மேல். குறைந்தது இரண்டு இலட்சம் பேருக்கு நாடி பரிசோதனை செய்து தேர்ந்த பிறகுதான் சித்த மருத்துவராக பயிற்சியை துவக்குகிறோம்.
நோய் ஒன்றுதான் ஆனால் மருந்துகள் வேறு. காரணம் அவர்களின் நாடிநிலைகளை அறிந்து அதன் அடிப்படையில் மருந்து தீர்மானிக்கப்படுகிறது. இவைதான் முழுமையான “சித்த மருத்துவம்”
சரியான சித்த மருத்துவ அறிமுகம் தொடரும்,..
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
website www.doctorjerome.com
No comments:
Post a Comment