Friday 25 November 2016

siddha medicine is not herbal medicine

சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம் அல்ல

Dr.Jeromeமருத்துவம் தான் பயில வேண்டும், அதிலும் தமிழின் மீது கொண்ட வேட்கையால் சித்த மருத்துவத்தை விரும்பி,1992ல் நான் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பொழுது, ‘சித்தா’ என்றால் என்ன? என்று பலர் கேட்ட கேள்விகள் என்னை சோர்வுறச் செய்திருக்கின்றன. B.S.M.S முடித்த பிறகு, சித்த மருத்துவமனையை சென்னையில் துவங்கியபோதும் சித்த மருத்துவத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த சற்று போராடவே வேண்டியிருந்தது. பத்து வருட அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் சித்த மருத்துவர் பேரறிஞர்(M.D) முடித்து, இன்றைய சூழ்நிலையை 1992ஆம் வருட நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவோ மாற்றம் மக்கள் மத்தியில் வந்திருக்கிறது. கைக்குழந்தைகளுக்கும் சித்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை தாருங்கள் என்று என்னிடம் கேட்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் சித்த மருத்துவம் பற்றிய ‘அறிமுகம்’ விரிவடைந்திருக்கிறது.
siththa maruththuvam1இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ மாற்றங்கள். கல்லூரி படித்த காலத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக உருவான ‘தேசிய சித்த மருத்துவ நிறுவனம்’(தாம்பரம்-சென்னை), பன்றிக் காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவ மனைகளிலேயே ‘நிலவேம்புக் குடிநீர்’ கொடுத்தது என ஆக்கப்பூர்வமானப் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம்.
இவற்றையெல்லாம் நினைத்து மகிழ்ச்சி அடைகின்ற அதே வேளையில் ஒரு சில விசயங்கள் சில தவறான சமிக்ஞைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தவறான சமிக்ஞைகளை சரிசெய்ய வேண்டிய கடமை என்னைப் போன்ற சித்த மருத்துவர்களுக்கும், இந்த இணையத்தைப் போன்ற ஊடகங்களுக்கும் உள்ளன. அதற்காகத்தான் இந்த கட்டுரை.
என்ன அந்தத் தவறான சமிக்ஞைகள்?
ஒரு புது வெள்ளம் போல சித்த மருத்துவம் பற்றிய ‘அறிமுகம்’ பெருகி ஓடி வருகிறது. வழக்கம் போல புது வெள்ளத்தில் வரும் குப்பைகள் போல தவறான கருத்துக்களும் சித்த மருத்துவத்தைப் பற்றி பரவ ஆரம்பித்திருக்கின்றது.
அதாவது சித்த மருத்துவத்தைப் பற்றிய ‘அறிமுகம்’ கிடைத்திருக்கிறதே தவிர, ‘சரியான அறிமுகம்’ கிடைக்கவில்லை.
ஒரு சில தவறான கருத்துக்களை சரி செய்வதற்கு இந்த கட்டுரை பயன்படுமானால், அது சித்த மருத்துவத்திற்கான வெற்றியை விரைவுபடுத்துவதற்கு ஒரு கருவியாக அமையும்.
முதல் தவறான கருத்து:
siththa maruththuvam2சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.
சில ஊடகங்களும் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகத்தை உண்டாக்குகின்றன. இது முற்றிலும் தவறு.
சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
siththa maruththuvam5உலோகங்கள் என எடுத்துக் கொண்டால் இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இன்று Maggi-யில் அதிக அளவில் இருப்பதாகக்கூறி தடைசெய்யப்பட்டுள்ள ‘காரீயம்’(Lead) கூட ஒரு மருந்துச் சரக்காக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் (Arsenic Compound), கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
siththa maruththuvam4உப்புகள் என எடுத்துக்கொண்டால் இந்துப்பு(Rock Salt), கல்லுப்பு(Asphalt), சீனாக்காரம்(Aluminum potassium sulphate), சூடன்(camphor), நவச்சாரம்(Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு(Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.
நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.
அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.
ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.
உதாரணத்திற்கு இன்று ‘Maggi’-யில்அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் Lead என்ற காரீயத்தின் சுத்தி முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.
மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).
இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.
siththa maruththuvam7உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்களை மாற்றுவதற்கே இந்தக் கட்டுரை.
இன்னும் சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான அறிமுகம் தொடரும்.
மேலும் தொடர்புக்கு:
Dr.ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
Doctors Plazza,
Opposite to Saravana Stores,
Near Velachery busstand,
Velachery, Chennai.
Ph.No: 9444317293
website www.doctorjerome.com 

self medication is dangerous

மூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது

Dr.Jeromeவிலங்குகளுக்குக் கூட மருத்துவ அறிவு உண்டு. சில உடல் உபாதைகளுக்கு சில மூலிகைகளைத் தேடி உண்ணுகின்ற அறிவு விலங்குகளுக்கும் உண்டு. ஆதிமனிதன் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொண்டான்.
suya maruththuvam7அப்படியானால் மருத்துவர் எதற்கு?
பல கோடிக்கணக்கான பணம் செலவுசெய்து கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகள் எதற்கு?
மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களை ஏன் உருவாக்க வேண்டும்?
மருத்துவமனைகள் எதற்கு?
மருத்துவம் சார்ந்த படிப்புகள் எதற்கு (Para Medical Sciences)?
மருத்துவ மேல்படிப்புகள் எதற்கு?
இன்னும் ஒருபடி மேலே சென்று கேட்க வேண்டுமானால் பள்ளிக் கூடங்கள் கூட எதற்கு?
நாம் அனைவரும் ஆதிவாசிகளாகவே இருந்துவிட்டு போகலாமே?
சரி விடயத்திற்கு வருவோம்.
சர்க்கரை நோயா? எலுமிச்சம் சாற்றுடன் தேனையும்…
மாதவிலக்கின் போது வலியா? வெந்தயத்தையும்…
தலைவலியா?….சுக்கையும்…
சளித்தொல்லையா?…. ஒரு பிடி துளசியோடு…
வயிற்றுவலியா?… ஓமத்தை பொடித்து…
பேதியா?… மாதுளை ஓடுடன்…
இப்படியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் ஒரு நாகரிகம் ஆகிவிட்டது.
suya maruththuvam1இப்படி எதையாவது கைவைத்தியம் அல்லது பாட்டிவைத்தியம் அல்லது மூலிகை வைத்தியம் என்ற பெயரில் செய்துவிட்டு, பேதியாவது நிற்காமல் மிகவும் நீர்ச்சத்து குறைந்து, இரத்த அழுத்தம் குறைந்து நிலைமை மிகவும் மோசமானதும் தூக்கிக்கொண்டு பெரிய மருத்துவமனைக்கு ஓட வேண்டியது.
அங்கே மருத்துவர் கேட்பார், “ஏன் இவ்வளவு மோசமாகும் வரைக்கும் வைத்திருக்கிறீர்கள்?” என்று, உடனே உடன் வந்த ஒரு மேதாவி கூறுவார், “டாக்டர் இவர்கள் ஏதோ ஒரு சித்தா மருந்து கொடுத்திருக்கிறார்கள்” என்பார்.
இப்படி சொல்லும் அளவுக்கு மூலிகை மருத்துவம், பாட்டிவைத்தியம், நாட்டுவைத்தியம், கைவைத்தியம் என்று என்பவைகளோடு எல்லாம் சித்த மருத்துவத்தையும் இணைத்து சிந்திக்கும் அளவுக்கு சித்த மருத்துவம் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றது.
(பிறகு மருத்துவமனையில் அனுமதித்த அந்த நபரை சில ஆயிரம் செலவு செய்து வீட்டிற்கு கூட்டி வருவர்)
மூலிகைகள் என்றால் இவர்களுக்கு ஏதோ ஒரு பொழுதுபோக்கு போல ஆகிவிட்டது.
சமையல் செய்வதைப் போலவும், காய்கறிகளில் பொம்மை செய்வது போலவும், ஒரு பொழுது போக்காக மூலிகைகளின் மருத்துவ பலன்களையும், மருத்துவக் குறிப்பையும் எழுதியும் பேசியும் வருவது பெருகி வருகின்றது.
ஆனால் இது சரியல்ல.
மருந்துகளில் மருந்துச்சரக்குகளை சேர்ப்பதற்கு முன், சுத்தி செய்வது (Purification) சித்த மருத்துவத்தில் ஒரு முக்கியமான அறிவியல் முறையாகும்.
உதாரணமாக மிகவும் அடிப்படையான மருந்துகளாக எடுத்துக்கொண்டால், சுக்கு, மிளகு, திப்பிலி எனக் கூறலாம்.
suya maruththuvam3இதில் சுக்கு கூட ஒரு மூலிகைப் பொருள் கிடையாது. இது உங்களுக்கு தெரியுமா?. சுக்கு என்றால் என்ன? இஞ்சியின் மீது சுண்ணாம்பு(Calcium Carbonate) என்ற வேதிப்பொருளை சேர்த்து கிடைக்கும் பொருள்தான் சுக்கு.
இதனை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு முன் சுக்குடன் மேலே இருக்கிற சுண்ணாம்பு மற்றும் தோலை நன்கு நீக்கிய பிறகே பயன்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு மூலிகைகளையும் பயன்படுத்த வேண்டிய முறை ஒன்று இருக்கிறது.
இதற்கும் மேலாக ஒரு மூலிகையை பயன்படுத்த வெண்டும் என்றால் அதை எப்படி சேகரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு முறையும், எந்தக் காலத்தில் சேகரிக்க வேண்டும் என்ற முறையும் உள்ளது.
உதாரணமாக ஒரு மூலிகையில் அதன் பல்வேறு பாகங்களை நாம் மருந்துச்சரக்காக (மருந்தாக அல்ல, மருந்துச் சரக்காக – Not as Medicine – but as a raw drug) பயன்படுத்துகிறோம்.
suya maruththuvam4உதாரணமாக ஒரு மூலிகையில் என்னென்ன பாகங்கள் மருந்துச் சரக்காக பயன்படுகின்றன?. அதன் வேர், வேர்பட்டை, கிழங்கு, தண்டு, கட்டை, பட்டை, கட்டையிலிருந்து எடுக்கும் நெய், பிசின், இலை, பூ, காய், கனி, விதை, விதையிலிருந்து எடுக்கும் நெய், மகரந்தம், காயிலிருந்து எடுக்கப்படும் பால், கனியின் உறை, முழு தாவரம் என இப்படி இன்னும் விரிவாக கூறிக்கொண்டே போகலாம். இவை ஒவ்வொன்றையும் நினைத்த நேரத்தில் எடுத்து பயன்படுத்திவிட கூடாது. அது நல்ல பலனையும் தராது.
suya maruththuvam5உதாரணமாக, ஒரு மூலிகையின் பூவைப் பற்றி மட்டும் கூறுகிறேன். பூக்களை மருந்துச் சரக்காக பயன்படுத்த வேண்டும் என்றால் கோடையில் சேகரிப்பதே நல்லது(summer). கோடையில்தான் அந்தந்த பூக்களில் உள்ள மருந்துச் சரக்குகள் (Phytochemicals) அதிகம் இருக்கும். இப்படி மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு மூலிகையின் பகுதிகளும் எப்படி சேகரிக்க வேண்டும், எந்தக் காலத்தில் சேகரிக்க வேண்டும் என்ற ஒரு முறை உள்ளது. இவையெல்லாம் தெரியாமல் 15 வருடங்களாக ஒரு தொட்டியில், ஒரு துளசி செடியை வளர்த்து விட்டு தலைவலியா ஒரு பிடி துளசி சாறுடன்… என மருத்துவம் சொல்ல ஆரம்பித்தால் என்ன செய்வது. இதெல்லாம் மருத்துவம் அல்ல.
மருத்துவம் என்பது உயிரோடும், உடலோடும், குடும்பத்தின் ஒட்டுமொத்த நிலையோடும், சமூகத்தோடும் அதற்கும் மேலாக உங்களுக்கு நம்பிக்கையிருந்தால், ஆன்மாவோடும் தொடர்புடையது.
suya maruththuvam2எனவே இதன் மூலமாக நான் சொல்ல விரும்புகிற விடயம் இதுதான், “உடல் நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை நேரில் சென்று கலந்து உரையாடுங்கள். எங்களுக்கு தெரியும் உங்களின் உடல்நிலை என்ன? அதற்கு என்ன மருத்துவம் தர வேண்டும் என்று. மூலிகைகளே ஆனாலும் சுயமருத்துவம் கூடாது”
சித்த மருத்துவம் இன்னும் வளரும்..
மேலும் தொடர்புக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
Doctors Plazza,
Opposite to Saravana Stores,
Near Velachery busstand,
Velachery, Chennai.
Ph.No: 9444317293
website www.doctorjerome.com 

what is Vatham , Piththam and Kabam



மிகினும் குறையினும்- எது?

Dr.Jeromeமருந்து என்றொரு அதிகாரம் திருக்குறளில் உள்ளது. அதன் முதல் குறளிலேயே சித்த மருத்துவத்தின் நோய் நாடலின், அதாவது நோய் இயலின்(Pathology) அடிப்படைக் கொள்கையை, நெற்றிப்பொட்டில் சுட்டது போல “பட்’டென்று கூறிவிடுகிறார் திருவள்ளுவர். அதாவது நோய்கள் வருவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை அந்த குறளில் கூறுகிறார்.
நம் உடலில் மூன்று விதமான கண்ணுக்கு புலப்படாத, நுண்நோக்கியால் பார்க்க முடியாத (Microscope), ஆய்வகங்களில் (Laboratory) அளவிட முடியாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைதான் வளியை அதாவது வாதத்தை முதலாவதாகக் கொண்ட வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படுபவை. இந்த மூன்றையும் பற்றி பல தொகுதிகளில் புத்தகங்கள் எழுதலாம். அவ்வளவு நுணுக்கமானவை இவை. அவ்வளவு நுணுக்கமாக தெரிந்துகொள்ளாவிட்டாலும், கண்டிப்பாக இவை பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் அவசியம்.
இவை எவ்வளவு நுணுக்கமான விடயங்கள் என்பது கண்டிப்பாக திருவள்ளுவருக்கு தெரிந்திருக்க வேண்டும். எதை வைத்து இவ்வளவு நிச்சயமாக திருவள்ளுவருக்கு இவை பற்றி விளக்கமாக தெரிந்திருக்கும் என கூறுகிறீர்கள்?” என நீங்கள் கேட்கலாம்.
பதில் இதுதான் “இந்த மூன்றும் சாதாரணமான விடயம் இல்லை என்பதை தெரிந்ததால்தான். இதனை தான் கூறுவதாகக் கூறாமல், “நூலோர்” இப்படி கூறுகின்றனர் என மேற்கோள் காட்டி கூறியிருக்கிறார். இதிலிருந்து இன்னொரு விடயமும் தெரியவந்தது, அவர் காலத்தில் மற்றும் அவர் காலத்திற்கு முன்பு சித்த மருத்துவ நூல்கள் இருந்திருக்கின்றன, அவற்றை எழுதிய மருத்துவ அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் “யூகி” என்ற சித்த மருத்துவ அறிஞரின் கருத்தைப் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
“அன்றான சாத்திரங்க ளறிய வேண்டும்
அன்பான நாடிதனைப் பிடிக்க வேண்டும்
குன்றான மலைப்போன்ற நாடி யெல்லாம்
குறிப்புடன் அசாத்தியமுந் சாத்தியமுங் கண்டு
தன்றான அட்டவிதப் பரீட்சை கண்டு
தக்கான குணங் குறிகள்யாவுந் தேர்ந்து
வன்றான வாகடத்தின் நுணுக்கம் பார்த்து
வளமாகப் பிணியதனைத் தீர்ப்போம் தாமே”
miginum kurayinum edhu4இதில் மருத்துவர்கள் அன்றான சாத்திரங்கள் அதாவது சமீபத்திய ஆராய்ச்சி நூல்கள் வரை கற்றிருக்க வேண்டும் (current Medical Specialities), வாகடத்தின் நுணுக்கம் பார்க்க வேண்டும் என்பவை மிகவும் கற்றறிந்த ஒரு மருத்துவப் பல்கலைக்கழக அணுகுமுறை இருந்திருப்பதை காட்டுகின்றது(Scholarly, Academic). சித்த மருத்துவத்திற்கு மிக நீண்ட, ஆழமான, அறிவுப் பூர்வமான கற்றறிந்த வரலாறு இப்படி இருக்க,… சிறுநீரக கல்லா? ஒரு பிடி துளசி எடுத்து … என பேசுவது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை உணர வேண்டும்.
சரி மீண்டும் “வளி முதலா எண்ணிய மூன்றிற்கு” வருவோம். எல்லோருடைய உடலிலும் இருந்த மூன்று இயக்கங்களும் (Humour) இயங்கிக் கொண்டிருந்தாலும், இதில் எந்த இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அதனை அடிப்படையாகக் கொண்டு அவர் உடல் நிலை இருக்கும். அதாவது அடிப்படையாக வாத உடல் உடையவர், பித்த உடல் உடையவர், கப உடல் உடையவர் என மூன்று விதமான உடல் இயங்கியல் உள்ள மனிதர்கள் இருப்பர். இவை மட்டுமல்லாது கலப்பு உடல் உடையவர்களும் உண்டு.
இதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை விதி. இந்த வாத, பித்த, கபம் உடலில் எவ்வாறு இயங்குகிறது, இவை உடலில் எந்த அளவில் உள்ளது என கண்டுபிடிப்பதற்கான ஒரு பரிசோதனை முறைதான் “நாடி பார்த்தல்”.
Pulse diagnostic closeupஒரு சித்த மருத்துவருக்கு அடிப்படையாக நாடிபார்ப்பதுதான் முதல் பயிற்சி. நாடி பார்ப்பது ஒரு ஆய்வகத்தில;(Clinical laboratory) நடக்கும் பல்வேறு வேதியல் பரிசோதனை போல சுலபமானது அல்ல.
மேலே குறிப்பிட்ட “யூகி” யின் பாடலில் உள்ளது போல
நாடிதனை பிடிக்க வேண்டும்.
குன்றான, மலைபோன்ற நாதமெல்லாம்
குறிப்புடன் பார்க்க வேண்டும்
நோயின் தீவிர நிலை தெரிய வேண்டும்
இது எப்படி சாத்தியமாகிறது?
உதாரணத்திற்கு B.S.M.S படிக்கும் ஒரு சித்த மருத்துவக் கல்லூரி மாணவரை எடுத்துக்கொள்வோம். மூன்றாம் ஆண்டிலிருந்து நோயாளிகளை பரிசோதிக்க ஆரம்பித்து விடுகிறோம். மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு பயிற்சி, மருத்துக் காலம் ஓர் ஆண்டு (CRRI- Compulsory rotatory residential Internship ) ஆக நான்கு ஆண்டுகள் தினமும் நோயாளிகளை சந்திக்கிறோம். ஒரு நாளைக்கு குறைந்தது வெளிநோயாளிகள் 50 பேர், உள் நோயாளிகள் 50 பேர் என 100 பேருக்கு நாடி பிடித்து பார்க்கிறோம். ஆக B.S.M.S படித்து முடிப்பதற்குள் 365X100X4=1,46,000  ஒரு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் பேரின் நாடி பரிசோதனையை பார்த்திருக்கிறோம். M.D மூன்று ஆண்டுகள் என எடுத்துக்கொண்டால் 365X100X3= 1,09,500 ஒரு இலட்சத்திற்கும் மேல். குறைந்தது இரண்டு இலட்சம் பேருக்கு நாடி பரிசோதனை செய்து தேர்ந்த பிறகுதான் சித்த மருத்துவராக பயிற்சியை துவக்குகிறோம்.
miginum kurayinum edhu2சரி மீண்டும் இறுதியாக வாத, பித்த, கபம் பற்றிய மனதில் நிறுத்த வேண்டிய ஒரு செய்தி. இந்த வாத, பித்த, கபத்தில் எது மிகுந்தாலும் குறைந்தாலும் அது நோய் நிலை (humoral pathology). அதுபோல ஒரே நோய் இருந்த மூன்று விதமான உடலினருக்கு வந்தாலும் அதை குணப்படுத்த கொடுக்க வேண்டிய மருந்துகளும் ஆளுக்கு ஆள் வேறுபடும்.
நோய் ஒன்றுதான் ஆனால் மருந்துகள் வேறு. காரணம் அவர்களின் நாடிநிலைகளை அறிந்து அதன் அடிப்படையில் மருந்து தீர்மானிக்கப்படுகிறது. இவைதான் முழுமையான “சித்த மருத்துவம்”
சரியான சித்த மருத்துவ அறிமுகம் தொடரும்,..
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
website www.doctorjerome.com 

32 types of siddha medicines

சித்த மருந்துகளின் வடிவங்கள்

Dr.Jeromeஒரு மருத்துவர் என்றால் யார்?, அவர் என்ன செய்வார்? என்று ஒரு குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். எல்லா குழந்தைகளும் இப்படித்தான் பதில் சொல்லும், “டாக்டர் ஊசி போடுவார்”. குழந்தைகளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று நான் கூறிவிடமாட்டேன், பெரியவர்களுக்குத் தெரிந்ததும் அவ்வளவுதான். மருந்து என்றால் என்ன? நோயைக் குணமாக்கும் ஒரு பொருள். அதை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
siththa marundhugalin vadivam11மருந்து என்றாலே ஊசி, மாத்திரை, டானிக் முடிந்தது. இதுதான் பெரியவர்களின் புரிதலும் கூட. மாத்திரை என்பது மருந்தின் ஒரு வடிவம். அதை வாய்வழியே கொடுத்தும் செயல்படாது என்ற நிலையில் அல்லது வாய்வழியே கொடுக்க முடியாத நேரத்தில், ஒரு ஊசியின் வழியே உடலுக்குள் அந்த மருந்து செலுத்தப்படுகிறது. அதேபோல அந்த மருந்து திரவவடிவில் டானிக்காக கொடுக்கப்படுகிறது.
இவையெல்லாம் மருந்துகளின் வடிவங்கள்.
இப்படி சித்த மருத்துவத்தில் மருந்துகள் எத்தனை வடிவங்களில் உள்ளது தெரியுமா?. 32 வடிவங்களில் சித்த மருந்துகள் செய்யப்படுகின்றன. அவற்றைப் பற்றிய மிகச் சுருக்கமான ஒரு அறிமுகத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கொடுப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
siththa marundhugalin vadivam10
32 வகையான சித்த மருந்துகள்:
  1. சுரசம்
  2. சாறு
  3. குடிநீர்
  4. கற்கம்
  5. உட்களி
  6. அடை
  7. சூரணம்
  8. பிட்டு
  9. வடகம்
  10. வெண்ணெய்
  11. மணப்பாகு
  12. நெய்
  13. ரசாயணம்
  14. இளகம் (இலேகியம்)
  15. எண்ணெய் (தைலம்)
  16. மாத்திரை
  17. கடுகு
  18. பக்குவம்
  19. தேனூரல்
  20. தீநீர்
  21. மெழுகு
  22. குழம்பு
  23. பதங்கம்
  24. செந்தூரம்
  25. பற்பம்
  26. கட்டு
  27. உருக்கு
  28. களங்கு
  29. சுண்ணம்
  30. கற்பம்
  31. சத்து
  32. குரு குளிகை
இதில் எத்தனை வகையான மருந்துகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்?
siththa marundhugalin vadivam12சமீபத்தில் நிலவேம்பு “குடிநீர்” பிரபலமானதால் குடிநீர் என்று ஒரு மருந்து வடிவம் உங்களுக்கு தெரியவந்திருக்கும். ஏதாவது இலை அல்லது கனியிலிருந்து எடுக்கப்படுவது “சாறு” என்று தெரிந்திருக்கும், “சூரணம்” என்பதையும் தெரிந்திருப்பீர்கள். மாத்திரை, இலேகியம் என்பவை மிகவும் பிரபலம். மிதமிஞ்சிப் போனால் “பஸ்பம்” (பற்பம்) என்ற மருந்தையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆக ஐந்து அல்லது ஆறு விதமான வடிவங்களில் சித்த மருந்துகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் 32 வகையான வடிவங்களில் சித்த மருத்துவத்தில் மருந்துகள் செய்யப்படுகின்றன.
ஒரு மருந்தை உடலுக்குள் செலுத்திவிட்டால் மட்டும் போதாது. அந்த மருந்தை உடல் உட்கிரகிக்க வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு “இரத்த சோகை” நோய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். அவருக்கு “இரும்பு” கொடுக்கப்பட வேண்டும். இரும்பு என்பது ஒரு உலோகம் அதை அப்படியே சாப்பிட்டால் சீரணம் ஆகாது. ஆனாலும் இரும்பைத்தான் கொடுக்க வேண்டும், என்ன செய்வது?. இரும்பை உடல் சீரணிக்கும் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் ஒரு வடிவம்தான் “பற்பம்” (பஸ்பம்). அதாவது “அயபற்பம்” (இரும்பு பற்பம்).
siththa marundhugalin vadivam8சரி, இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், “அப்படியானால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு உங்கள் மருந்துச்சீட்டில் எழுதப்படும் மருந்து ‘அயபற்பம்’ என்பதுதானா?” என நீங்கள் கேட்கலாம்.
இல்லை, முதலில் நோயாளியின் உடல் நிலையைப் பார்க்க வேண்டும், அவர் நாடி நிலையை பரிசோதிக்க வேண்டும், தேவைப்பட்டால் மேற்கொண்டு பரிசோதனைகளை எடுக்க வேண்டும். பின்னர் மூலிகை மருந்துச் சரக்குகளால் ஆன மருந்துகளால் குணமாக்க முடியுமா என்பதை கணிக்க வேண்டும்.
உதாரணமாக கீழ்கண்ட வடிவங்களில் உள்ள மருந்துகளில் ஏதேனும் ஒரு வடிவத்தில் அவருக்கு மருந்தை முடிவு செய்யலாம்.
உதாரணம்:
சூரணம் – கரிசாலை சூரணம்
இலேகியம் – கரிசாலை இலேகியம், நெல்லிக்காய் இலேகியம்
செந்தூரம் – காந்த செந்தூரம், அயகாந்த செந்தூரம், சுயமாக்கினி செந்தூரம்
பற்பம் – அயபற்பம்
சாறு – நெல்லிக்காய் சாறு
கற்பம் – கரிசாலை கற்பம், அயபிருங்கராக கற்பம்
குடிநீர் – மண்டுராதி குடிநீர்.
இப்படி பல்வேறு வடிவங்கள் நோய்க்கான காரணம் அறிந்து மருந்துகள் வழங்கப்படுகின்றன.
சித்த மருத்துவத்தில் இதற்கான ஒரு தத்துவம் உள்ளது.
“வேர்பாரு தலைபாரு மிஞ்சினக்கால்
மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே…”
அதாவது முதலில் தாவர மருந்துச் சரக்குகளால் ஆன மருந்துகளைக் கொண்டு நோயினை குணமாக்க முயற்சி செய்ய வேண்டும். நோய் குணமாகாவிடில் பின்னர் பற்பம், செந்தூரம் போன்ற பெரிய மருந்துகளை செந்தூரம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
அதென்ன பெரிய மருந்துகள்?” என நீங்கள் கேட்கலாம். மருந்தின் சக்தி (Potency) வடிவங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு மருந்தை பொடி செய்து பயன்படுத்துவதற்கும், குடிநீராக பயன்படுத்துவதற்கும், இலேகியமாக பயன்படுத்துவதற்கும், மாத்திரையாக பயன்படுத்துவதற்கும், பற்பமாக பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
மருந்தின் வீரியங்களைப் பற்றி விளக்க நிறைய உதாரணங்கள், விளக்கங்கள் கொடுக்கலாம். ஆனால் ஒரே ஒரு உதாரணத்தைக் கொடுத்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
ஒரு மருந்துச் சரக்கை இடித்து பிழிந்து எடுப்பது “சாறு” இதன் ஆயுள் காலம் எவ்வளவு தெரியுமா? (Expiry Period) மூன்று மணி நேரம்தான்.
ஒரு குடிநீர் மூன்று மணி நேரம் தான் அதன் மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கும். அதன் பிறகு செயலிழந்து விடும்.
மாத்திரை ஒரு வருடம் ஆயுள் காலம் உள்ளது. (தயாரிக்கும் முறையைப் பொருத்து சற்று வேறுபடும்.)
“பற்பம்” என்ற ஒரு வடிவத்தை கூறினேனே, அதன் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா? 100 ஆண்டுகள்.
இப்படி சித்த மருந்துகளில் வடிவமும், வீரியமும் தயாரிப்பு முறைகளும் கடல் அளவு இருக்க, இன்னும் “சிறுநீரக செயலிழப்பா?, ஒரு பிடி துளசியோடு…” என மூலிகை மருத்துவம் எனவும், நாட்டுவைத்தியம் எனவும் சிறுபிள்ளைத்தனமாக சித்த மருத்துவத்தை ஒப்பிட்டுப் பேசுவதை மாற்றுவதற்கு இந்தக் கட்டுரை பயன்படுமானால், அது சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு ஒரு வெற்றி.
மிகப்பெரிய ஒரு தலைப்பை மிகமிகச் சுருக்கமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். மற்றவர்களுக்கும் இதைப் பகிருங்கள்.
சித்த மருத்துவம் வளரும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
website www.doctorjerome.com